நாமக்கல்: பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி நாமக்கல் மாவட்ட சமூகநலத்துறை சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று (அக்.9) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
அப்போது விழாவில் பேசிய அமைச்சர் சரோஜா, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் பெற்றவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு, 18 வயது பூர்த்தியான பிறகு முதிர்வுத்தொகை அந்த பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாண்டில் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 144 பெண் குழந்தைகளுக்கு 41 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விமானங்களின் தகவலை பாகிஸ்தானுக்கு அளித்த எச்ஏஎல் அலுவலர் கைது!