நாமக்கல்:பிற மாநிலங்களை காட்டிலும், தமிழ்நாட்டில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுவருவதாக லாரி உரிமையாளர்கள் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டிவந்தனர். இந்நிலையில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி நேற்று (டிசம்பர்10) நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் லாரிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டு கருவி தமிழ்நாட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுவருகிறது. இந்த கருவிகள் கர்நாடகாவில் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒளிரும் ஸ்டிக்கர் வெளி மாநிலங்களில் 600 ரூபாய் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. எனவே ஜிபிஎஸ் கருவி, வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் போன்றவை ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தி வருவதால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது.