தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் - silamboli sellapan

நாமக்கல்: மா.பொ.சிவஞானம், கலைஞர் கருணாநிதி ஆகியோரால் போற்றப்பெற்ற முதுபெரும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

சிலம்பொலி செல்லப்பன்

By

Published : Apr 6, 2019, 11:55 AM IST

1928ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் என்னும் ஊரில் பிறந்த சிலம்பொலி செல்லப்பன் மூத்த தமிழறிஞர். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், தொல்காப்பியன், கொங்குவேள் என்ற மகன்களும் மணிமேகலை, கெளதமி, நகைமுத்து என்ற மகள்களும் உள்ளனர். கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் மேடைப் பேச்சாளர், உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பணிகளை செய்துள்ளார்.

சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத்தேன் முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றிருக்கும் இவர் எழுதிய “சிலம்பொலியாரின் அணிந்துரைகள்” என்னும் நூல், தமிழ் வளர்ச்சித்துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

1975ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் பற்றிய முழுமையான ஆய்வு நூலை எழுதி சிலம்பொலி என்ற தலைப்பில் வெளியிட்டார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி, சிலம்பொலி நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில் கண்ணகி காப்பியம் தமிழினத்தின் தேசியச் சொத்து. இதை மக்கள் மத்தியில் பரப்ப அயராது பாடுபட்டு வரும் சிலம்பொலி செல்லப்பனாருக்கு என் வாழத்துக்கள். அன்பிலும் பண்பிலும் சிறந்தவராதலால் சிலம்பு பற்றிய இவரது பேச்சிலும், எழுத்திலும் அவை எதிரொலிக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர், அவர் நூலை வெளியிட்டபோது "சிலம்பொலி செல்லப்பனாக ஆனவர் அல்ல, அவர் சிலம்பொலி செல்லப்பனாகவே இருந்த காரணத்தால்தான் அவர் எழுதிய நூலுக்கு சிலம்பொலி என்ற பெயர் வந்திருக்கிறது. இந்த நல்ல எழுத்தாளர், நல்ல ஆற்றலாளர், நல்ல தமிழ் வல்லுனர் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இப்போற்றுதலுக்குரிய தமிழறிஞர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.

ABOUT THE AUTHOR

...view details