நாமக்கல்: நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 6,500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி முதல்வராக பால் கிரேஸ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் நாமக்கல் கல்லூரியில் பணியாற்றி வந்த போது கல்லூரியில் அம்பேத்கர் படத்தை அகற்றியது, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை தரக்குறைவாகப் பேசுவது உள்ளிட்ட செயல்கள் காரணமாக கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதன்பின் நீதிமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தடையாணையைப் பெற்று மீண்டும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் கல்லூரியில் வணிகவியல் மற்றும் பொருளாதாரத்துறையில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு நல்லுசாமி என்ற துறை தலைமைப் பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர் என இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்தச் சூழலில் நேற்று வணிகவியல் துறையின் தலைமைப் பேராசிரியர் நல்லுசாமி, தனது துறையில் பயிலும் மாணவிகளின் இன்டர்ன்ஷிப்புக்கு கையெழுத்து வாங்க கல்லூரி முதல்வர் பால் கிரேஸை சந்தித்துள்ளார். அங்கு நல்லுசாமியை கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் மாணவிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், எவ்வாறு இந்த கல்லூரியில் வேலை செய்கிறீர்கள் என கடிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கையெழுத்துப்போட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் வணிகவியல் துறை மாணவிகளும், துறையின் தலைமைப் பேராசிரியர் நல்லுசாமியும் காலை முதல் மாலை 6 மணி வரை கல்லூரி முதல்வர் பால் கிரேஸின் அலுவலகத்தின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.