+2 தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி ஸ்ரேயாவுக்கு குவியும் வாழ்த்து! நாமக்கல்: தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 378 பேர் தேர்வு எழுதிய நிலையில் 356 பேர் தேர்ச்சி பெற்று 94 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலேயே பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை இந்த பள்ளியில் பயின்றவர்.
அந்த பள்ளியில் படித்த ஆவராங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி மகள், திருநங்கை ஸ்ரேயா (20). இவர் தமிழில் 62 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 56 மதிப்பெண்களும், பொருளியலில் 48 மதிப்பெண்களும், வணிகவியலில் 54 மதிப்பெண்களும், கணக்கு தேர்வில் 58 மதிப்பெண்களும் மற்றும் கணினியியலில் 59 மதிப்பெண்களும் என மொத்தம் 337 மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டில் முதல் திருநங்கையாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் சக ஆசிரியர்கள் மாணவி ஸ்ரேயாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை மாணவி ஷ்ரேயா, "தான் தனது தாய் வளர்ப்பில் வளர்ந்து வருவதாகவும், தொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறப் பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் தாயின் அரவணைப்பு காரணமாக 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தொடர் முடிந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசு தனக்கு உதவி செய்ய முன் வந்தால் பல்வேறு சாதனைகளை என்னால் செய்ய முடியும் என மாணவி ஸ்ரேயா நம்பிக்கை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தன்னை போன்ற திருநங்கைகள் கல்வியில் கவனத்தைச் செலுத்தினால் வாழ்வில் மேன்மை அடைய முடியும்" எனவும் மாணவி ஸ்ரேயா தெரிவித்தார்.
இதையும் படிங்க: +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை!