தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைக் கிடங்கை சுத்தம் செய்ய விடப்பட்ட டெண்டரில் முறைகேடு - ஆர்டிஐ அம்பலம்!

நாமக்கல்: பரமத்திவேலூர் பேரூராட்சியில் கிடக்கும் குப்பைக் கழிவுகளை சுத்தம் செய்ய விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அம்பலமாகியுள்ளது.

Garbage Warehouse
Garbage Warehouse

By

Published : Dec 6, 2019, 11:57 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் 5 டன் குப்பைகள் வடக்கு நல்லியாம்பாளையம் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த 12 ஆண்டுகளாக கொட்டி வைக்கப்பட்டு வருகிறது.

இந்தக் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் ஒரே இடத்தில் கொட்டி தீ வைக்கப்படுவதால் அடிக்கடி அப்பகுதியில் தீப்பற்றி எரிவதோடு, புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை

குப்பையை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் வாயிலாகவும் மாநில அரசின் நகர்ப்புறம் மற்றும் ஊராட்சி துறைக்கு நிதி வழங்கி, இம்மாதிரியான குப்பைகள் அகற்றவும், மறு சுழற்சி செய்யவும் மத்திய அரசு நிதி ஒதுக்கியது.

குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் விளைவு

அதனடிப்படையில் மாவட்டம் வாரியாக பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு குப்பைகளை அகற்ற டெண்டர் விடப்பட்டது. இதன்கீழ் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியின் வளமீட்பு பூங்காவில் உள்ள பழைய வரலாற்றுக் கழிவுகளை சுத்தம் செய்ய 32.17 இலட்ச ரூபாய் மதிப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் 21 நாட்களுக்குள் வேலையைத் தொடங்கி, குப்பைகள் சுத்தம் செய்யும் பணிகள் அனைத்தையும் 90 நாட்களுக்குள் முடித்திட வேண்டும், அந்நிறுவனம் ஆண்டு வரவு செலவினம் 80 இலட்சத்துக்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த டெண்டரில் சென்னையைச் சேர்ந்த ஈக்கோ விசன் வேஸ்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் போத்தனூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அசோக் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

தற்போது டெண்டர் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அப்துல் ரகுமான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களின் வாயிலாக அம்பலமாகியுள்ளது.

உண்மைகளைக் கூறும் அப்துல் ரகுமான்

வேலூர் பேரூராட்சியின் குப்பைகளைச் சுத்தம் செய்ய விடப்பட்ட டெண்டரில் எந்த விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
அதனோடு, டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் கழித்தே பெயருக்கு சில இயந்திரங்கள் நிறுவியுள்ளதோடு, டெண்டர் எடுத்த நிறுவனம் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் எந்தவித அனுமதியும் பெறவில்லை.

பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்கள் இல்லாமல் கழிவுகளைத் தொடர்ந்து தீயிட்டு எரித்து வருகின்றனர். குப்பையைச் சுத்தம் செய்யும் பணி ஜூலை முதலே நடைபெறுவதாக அலுவலர்கள் கூறிய நிலையில், ஆகஸ்டு மாத இறுதியில் தான் மின் இணைப்பிற்கே விண்ணப்பித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் உறுதியாகியுள்ளது.

மேலும், இதே நிறுவனம் தான் ஜலகண்டாபுரம், வாழப்பாடி, தம்மம்பட்டி, ஓமலூர் ஆகிய பேரூராட்சிகளிலும் முறைகேடாக டெண்டர் எடுத்துள்ளதாகவும், இதன் மீது உரிய விசாரணை நடத்தி டெண்டரை ரத்து செய்து, தகுதியுள்ளவருக்கு டெண்டர் விட்டு குப்பைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் மென்பொருள் பொறியாளர் அப்துல் ரகுமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மதியழகன் கூறுகையில், "வேலூர் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றாமல் அவ்விடத்திலேயே வைத்து எரித்து விடுகின்றனர். இதனால் காற்று மாசுபாடு அடைவதோடு மக்களுக்கு புற்றுநோய் உட்பட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குப்பைகளை அகற்றும் பணிக்கு விடப்பட்ட டெண்டர் எடுத்த நிறுவனம் முறைகேடாக டெண்டரைப் பெற்றுள்ளது. இதற்கு அலுவலர்கள் துணை புரிந்துள்ளனர். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் உள்ளூர் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் பரமத்தி வேலூர் பேரூராட்சியில் குப்பைச் சுத்தம் செய்தலில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து கேட்ட போது அவ்விடத்தில் நடைபெறும் பணிகள், டெண்டர் விதிமுறைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராகிறார் சஜித் பிரேமதாச!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details