நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசாம்பாளையம் ஊராட்சித் தலைவர் பதவியானது பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு ஐந்து பேர் போட்டியிட்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வேட்பாளராக உள்ளார் அதே ஊராட்சியில் வசிக்கும் சரண்யா.
இவர் எல்லப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் லாரி உரிமையாளர் பாலசுப்பிரமணியத்தின் மனைவி ஆவார்.
பார்வை திறன் இல்லாதவராண சரண்யா, தனது குறையை ஒரு பொருட்டாக எண்ணாமல் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு ஊராட்சி தலைவர் பதவிக்கு மூக்கு கண்ணாடி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இளங்கலை பட்டப்படிப்பு பயின்றுவரும் இவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கணவரின் சமூக செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இவரும் சமூகத்திற்காக பணியாற்றவேண்டும் என்ற நோக்கில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தனது கணவரின் துணையுடன் களம் இறங்கியுள்ளார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ஊராட்சிப் பகுதியில் அனைத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருவதாகவும், தான் வெற்றி பெற்றால் ராசாம்பாளையம் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றிக்காட்டுவதாகவும் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
தனது கணவரின் சிறு, சிறு சமூக செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட தானும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகவும், இதற்கு தனது கணவரும், குடும்பத்தினரும் முழு ஆதரவு தெரிவித்து தன்னுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறும் சரண்யா, தான் வெற்றி பெற்றால் ஊராட்சியில் அனைவருக்கும் குடிநீர், சுகாதாரம், தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, ஊராட்சியின் சார்பில் மக்களின் அவசர தேவைகளுக்கு கட்டணமில்லா கார் சேவையை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
தனது மனைவி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்னம்பிக்கை மிக்கவராக விளங்குவதோடு சமூக அக்கறை கொண்டுள்ளார். அவருடைய முழு விருப்பத்தோடு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனது மனைவி நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெற்றால் ஊராட்சியின் வளர்ச்சிக்கு சரண்யாவுக்கு துணையாக இருப்பேன் என பாலசுப்பிரமணி உறுதியளிக்கிறார்.
வேட்பாளரின் கணவர் பாலசுப்ரமணி தனது குறையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மனதில் நம்பிக்கையோடு உள்ளாட்சித் தேர்தலில் களம் கானும் சரண்யா போன்ற பல மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளி உலகிற்கு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.