நாமக்கல் மாவட்டத்தில் சில விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் நோய் தாக்குதலின் காரணமாக அழிந்து போவதாக வந்த புகாரை நமது செய்தியாளர்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணைய ஊடகத்தில் காட்சிப்படுத்தினர். இது வேளாண் அலுவலர்கள் கவனத்திற்குச் சென்றதையடுத்து, உடனடியாக நேரில் சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் குள்ளப்பநாயக்கன்பட்டி, கதிராநல்லூர், பாச்சல், கடந்தபட்டி, மொஞ்சனூர், வளையப்பட்டி, வெண்ணந்தூர், கல்லுபாளையம், பட்டணம், கைலாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வெங்காயம், அழுகல் மற்றும் பூஞ்சான நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 30 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பிரத்யேக செய்தி நவம்பர் மாதம் 8ஆம் தேதி ஈடிவி பாரத் தமிழ்நாட்டில் ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ், இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து உயர் அலுவலர்களை வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேளாண்மைத் துறை உயர் அலுவலர்களுக்குத் தகவல் அனுப்பினார்.