நாமக்கல் அடுத்த மரூர்பட்டி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து அக்கிராம மக்கள் குடிநீருக்காக கடும் அவதிபட்ட நிலையில், காவிரி குடிநீரும் முறையாக கிடைக்கவில்லை. இந்நிலையில் அதிகளவு ஓட்டுநர்கள் நிறைந்த இப்பகுதிக்கு அசோக் லைலேண்ட் நிறுவனத்தின் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நிறுவனம் முன் வந்தது. அதற்காக ஜல்ஜீவன் கிராமம் என்ற திட்டத்தை தொடங்கியது. இதன் கீழ் அந்நிறுவனத்தின் சார்பில் 12 லட்ச ரூபாய் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறும் தோண்டப்பட்டு தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டது. இதற்கான செலவினத்தை கணக்கிட்டு பொது மக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 20 லிட்டர் குடிநீர் 4 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இங்கு குடிநீர் பெற 250 ரூபாய் வைப்பு தொகை செலுத்தி குடிநீர் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் அந்த அட்டையை ரீசார்ஜ் செய்து தானியங்கி இயந்திரத்தின் மூலம் மின்னனு அளவீட்டு படி நமது தேவைக்கேற்ப 5 லிட்டர் முதல் 60 லிட்டர் வரை தினசரி குடிநீரை பெற்று கொள்ளலாம்.
இதுகுறித்து குடிநீர் சுத்திகரிப்பு விற்பனை நிலையத்தில் பணிபுரியும் சண்முகபிரியா கூறுகையில், கடந்தாண்டு மரூர்பட்டி ஊராட்சி நிர்வாகமும் அசோக் லேலண்ட் நிறுவனமும் இணைந்து ஜல்ஜீவன் கிராமம் என்ற திட்டத்தின் மூலமாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவி மக்களுக்கு 4 ரூபாயில் 20 லிட்டர் குடிநீர் வழங்குவதாக முடிவு செய்தன. இந்த தானியங்கு குடிநீர் இயந்திரத்தில் குடிநீர் பெற இக்கிராமத்தை சேர்ந்த 284 பேர் இணைந்துள்ளனர். அம்மக்களுக்கு குடிநீரை பெற 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடுவை இலவசமாக வழங்கப்பட்டது. மரூர்பட்டி அருகில் உள்ள கிராம மக்களும் 4 ரூபாயில் சுகாதாரமான சுத்திகரிக்கபப்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.