சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு: 400 காளைகள், 200 காளையர்கள் பங்கேற்பு - jallikattu
நாமக்கல்: சேந்தமங்கலம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகள், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில்ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை மாவட்ட சார் ஆட்சியாளர் கிரந்திகுமார் பதி மற்றும் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்த போட்டியில் அலங்காநத்தம், சாலப்பாளையம், பொட்டிரெட்டிபட்டி, சேந்தமங்கலம், முள்ளுக்குறிச்சி, தம்மம்பட்டி, சேலம், துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.
மருத்துவக்குழுவினரின் தீவிர பரிசோதனைகளுக்கு பிறகே காளைகளையும், மாடுபிடி வீரர்களையும்போட்டிகளில் பங்கேற்க அனுமதித்தனர். மேலும் முதலுதவி அளிப்பதற்காக அவசரகால ஊர்திகள் மற்றும் முதலுதவி நிபுணர்கள் தயார் நிலையில் இருந்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் கட்டில், மேஜை, நாற்காலி, பாத்திரங்கள், தங்க - வெள்ளி காசுகள் உட்பட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.