காரில் கடத்தி வரப்பட்ட 206 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்!
நாமக்கல்: கார் ஒன்றில் கடத்தி வரப்பட்ட 206 வெளிமாநில மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல்செய்து, கடத்தல் சம்பவம் தொடர்பாக இருவரை கைதுசெய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதால், இங்கு இதுவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. எனவே யாராவது வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்களை வாங்கிவந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்களா? எனக் காவல் துறையினர் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.
அந்தவகையில் நாமக்கல் அடுத்துள்ள முதலைப்பட்டி பகுதியில் லாரி பாடி கட்டும் நிறுவனம் ஒன்றில் முன்பு சந்தேகப்படும்படியாகக் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதாக நல்லிபாளையம் காவல் துறையினக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் காரை சோதனைசெய்தனர்.
இந்தச் சோதனையின்போது அந்தக் காரில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திவந்து, அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்து 206 மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்தபோது நாமக்கல் என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த கதிர்வேல் (38), அவரது அண்ணன் சதாசிவம் (40) ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை சட்ட விரோதமாக வாங்கிவந்து, நாமக்கல் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கதிர்வேல், சதாசிவம் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மேலும் தப்பி ஓடிய ஓட்டுநர் மணி என்பவரை தேடிவருகின்றனர்.