நாமக்கல் மாவட்டத்தில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் முடி திருத்தகங்கள், ஜிம், ஜவுளிக்கடைகள், மால்கள் திறக்க அனுமதி இல்லை எனவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட மூன்று நபர்கள் வசித்து வந்த குமாரபாளையம் அடுத்துள்ள ரெங்கனூர், பள்ளிபாளையம், ஆண்டிபாளையம் உள்ளிட்டப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்றது.
இப்பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் அரசின் உத்தரவை மீறி, திறந்து வைக்கப்பட்டிருந்த முடி திருத்தகத்தை ஆட்சியர் திடீரென ஆய்வு செய்து, கடையை மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.