நாமக்கல்: பரமத்தி சாலையில், ஐவின்ஸ் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் (செப்.16) இரவு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் அதற்காக சக மாணவ, மாணவிகளுக்கு விருந்து வைக்க முடிவு செய்துள்ளார். அதன்பேரில், 13 பேர் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற உணவகத்திற்கு உணவருந்த சென்றனர். அங்கு அவர்கள் ஷவர்மா, கிரில் சிக்கன், மற்றும் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு இரவு கல்லூரி விடுதிக்கு திரும்பி சென்றனர்.
இந்நிலையில், உணவருந்திய 13 மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டன. உடனடியாக விடுதி காப்பாளர் மாணவ, மாணவிகளை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவ, மாணவிகளுக்கு நேற்று இரவு (செப்.17) உணவகத்தில் உணவு உட்கொண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேபோல், சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்த கவிதா, தனது மகள் கலையரசி, மகன் பூபதி, தாய் சுஜிதாவுடன் ஐவின்ஸ் கடையில் ஷவர்மா மற்றும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். வீடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால் அங்கிருந்த செவிலியர் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்து அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின், மீண்டும் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே, சிறுமி வீட்டிலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் அனைவரும் சுயநினைவில்லாத நிலையில் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சூழலில், ஐவின்ஸ் உணவகத்தில் உணவருந்திய 43 பேர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (செப்.17) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். அதன்பின், சம்மந்தப்பட்ட ஐவின்ஸ் என்ற உணவகத்திற்கு ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் ஷவர்மா தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் இயந்திரம் சுகாதாரமற்று அசுத்தமான நிலையில் இருந்தன, மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்தில் இருந்த கோழி இறைச்சியை ஆய்விற்காக எடுத்து சென்றனர். இதனையடுத்து ஐவின்ஸ் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
அதன்பின், இன்று சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு இறைச்சி சப்ளை செய்யும் கோனார் இறைச்சி கடையையும் ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார். இதன்பின், நாமக்கல் ஆட்சியர் உமா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஆட்சியர் உமா, “ஐவின்ஸ் உணவகத்தில் சனிக்கிழமை அன்று உணவருந்திய 200 பேரில் 43 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிறுமி ஒருவர் உயிரிழந்தார், அதன்படி உணவக உரிமையாளர் நவீன்குமார், ஊழியர்கள் சஞ்சய் , சமாஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் வரமுடியாது வகையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் ஆகியவை ஹோட்டல்களில் விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். இதேபோல் கடந்த ஆண்டு கேரளாவில் சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு... உணவகத்திற்கு சீல்... அதிகாரிகள் தீவிர விசாரணை!