நாமக்கல்: திருச்செங்கோடு தினசரி மார்க்கெட்டில் பச்சை பட்டாணிக்கு பதிலாக காய்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊற வைத்து பச்சையாக தெரிவதற்காக பச்சை வண்ணம் சேர்த்து விற்பதாக நகராட்சி அதிகாரிகளிடம் புகார் வந்தது. புகாரை அடுத்து நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில் இன்று (ஜன.20) துப்புரவு ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சில காய்கறி கடைகளில் காய்ந்த பட்டாணிகளை மூட்டை மூட்டையாக வாங்கி வைத்து பாத்திரங்களில் பச்சை நிறம் கொண்ட ரசாயன பவுடர்களை தண்ணீரில் கலந்து, அதில் பட்டாணிகளை ஊறவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.