நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தில் வசிப்பவர் நல்லுசாமி (71). இவரது மகன் வாசுதேவன். இவர், தனது தந்தை என்றும் பாராமல் நல்லுசாமியின் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்து தனது மகன் பெயருக்கு எழுதி வாங்கியுள்ளார். இதன் பின்னர், தினந்தோறும் மதுபோதையில் முதியவர் நல்லுசாமியை அடித்து உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில் நல்லுசாமியை வாசுதேவன் வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியதையடுத்து, மகனால் பாதிக்கப்பட்ட நல்லுசாமி நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமாரை சந்தித்து இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார் முதியவர் நல்லுசாமியின் மகன் வாசுதேவனிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் வாசுதேவன் செய்தது தெரியவந்ததையடுத்து, பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு நலவாழ்வு சட்டத்தின் அடிப்படையில் வாசுதேவனிடமிருந்த இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டு முதியவர் நல்லுசாமி பெயருக்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நல்லுசாமியின் உயிருக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதியவரின் சொத்தை மீட்ட வருவாய் கோட்டாட்சியர் மீட்கப்பட்ட சொத்துகள் தொடர்பான ஆவணங்களையும் வருவாய் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட முதியவரிடம் ஒப்படைத்தார். மேலும் வாசுதேவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்குப் பரிந்துரைசெய்துள்ளார்.
இதையும் படிங்க: மகாத்மா காந்தியின் சிலை முற்றிலும் நாசம்; அம்ரெலியில் பரபரப்பு!