நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சாலை விபத்துகளைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சாலை விதிகள், அதனைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
மேலும், பள்ளியில் உள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்டு, பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் சாலைப் பாதுகாப்புப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும்வகையில் சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், போக்குவரத்துத் துறை, பள்ளிக் கல்வித் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நாமக்கல் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர். குறிப்பாக ஆட்சியர் பேசியபோது, சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும், ஒரு விபத்து ஒருவரின் குடும்பத்தின் நிலையையே மாற்றிவிடுவதாகவும் தெரிவித்தார்.
சாலைப் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மேலும், பள்ளிப் பருவத்திலேயே சாலை விதிகளைக் கற்றுக் கொடுப்பதோடு அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் மாணவர்களிடையே எடுத்துக் கூற வேண்டும் என்றார். இந்தக் கருத்தரங்கில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:நீங்கள் பொதுசேவையில் விருப்பமுள்ளவரா? - ஊர் காவல்படையில் வேலைவாய்ப்பு