நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில், மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், அதிலுள்ள பிரச்னைகள் குறித்தும் வணிகர் சங்கத்தினர் ஆட்சியரிடம் எடுத்து கூறினர்.
கடைகள் திறப்பு நேரம் குறைப்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாமக்கல்: வணிக ரீதியான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், வேளாண் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க முடிவெடுத்துள்ளதாக வணிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
மேலும் கரோனா தொற்றை கட்டுபடுத்த தங்களது வணிக நிறுவனங்களின் திறப்பு நேரத்தை குறைப்பது குறித்தும், அனைவரும் சமூக நலனுடன் செயல்படுவதன் அவசியம் குறித்தும் கருத்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மெகராஜ் "நாமக்கல் மாவட்டத்தில் வணிக ரீதியான கடைகள் , காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் இயங்க அனுமதி எனவும், வேளாண் இடுபொருட்கள், அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். உணவகங்கள் வழக்கம் போல் அரசு அறிவித்தப்படி இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும், கடைகளுக்கு வருவோரும், கடைகளில் உள்ள ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் நாளை (23.06.20) முதல் வருகின்ற 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்" எனவும் தெரிவித்தார்.