தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்? - இந்தியாவில் டிராக்டர் விற்பனை

கரோனா காலத்தில் ஆட்டோமொபைல் துறை கடும் சரிவைச் சந்தித்துவரும் நிலையில், வேளாண்மையின் மீதான ஆர்வம் டிராக்டர் விற்பனையை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை
தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை

By

Published : Oct 7, 2020, 4:46 PM IST

Updated : Oct 17, 2020, 11:13 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தின. பின்னர், இந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. இதனால், பல துறைகளில் பொருளாதார மந்தநிலை உருவாகியது. வேலையின்மை, மூலப்பொருள்கள் தட்டுப்பாடு, உற்பத்தி நிறுத்தம் எனப் பல்வேறு காரணங்களால் தொழிற்சாலைகள் இயங்காத நிலையில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்தது.

கரோனா காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாகனங்கள், நகை உள்ளிட்ட ஆடம்பரப் பொருள்களுக்கான விற்பனையும் குறைந்துள்ளது. இந்திய சந்தையில் முன்னணி நிறுவனங்களின் கார், பைக், கனரக வாகனங்களின் விற்பனை மார்ச் மாதம் முதலே மந்தமாகி உள்ள நிலையில், இதற்கு மாறாக நாடு முழுவதும் டிராக்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

பொது முடக்க அறிவிப்பினால் விளைவித்த காய்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் அல்லல்பட்டனர். பல மாவட்டங்களில் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளைச் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது, வேளாண் துறையில் அரசின் கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுதந்திரமான தாராளமயமான சந்தையை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு, இரண்டு புதிய மசோதாக்களையும் ஒரு சட்ட திருத்த மசோதாவையும் அறிமுகப்படுத்தியது. இதனால் தாங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவோம் எனக் கூறி விவசாயிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அப்படியிருக்க, எப்படி டிராக்டர் விற்பனை அதிகரிக்கிறது, இது யாருக்கு பயனுள்ளதாக இருக்கிறது என நாமக்கல் மாவட்டத்தில் சிலரிடம் கேட்டோம். நடப்பு ஆண்டில் டிராக்டர் விற்பனை, பிற வாகனங்கள் விற்பனையுடன் ஒப்பிடும்போது 60 விழுக்காடு அதிகரித்து உள்ளது. புதிய டிராக்டர் மட்டுமல்லாது, பழைய டிராக்டர் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது என்கிறார் டிராக்டர் விற்பனை நிலைய உரிமையாளர் மேகநாதன்.

கடந்த ஆண்டு ஜீன், ஜீலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 700 டிராக்டர்கள் விற்பனை ஆகின. இந்நிலையில், இந்த ஆண்டு அதே 3 மாதங்களில் 7 ஆயிரத்து 800 டிராக்டர் விற்பனை ஆகி உள்ளன. கரோனா காலத்தில் ஆட்டோமொபைல் துறை கடும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், விவசாயத்தின் மீதான ஆர்வம் டிராக்டர் விற்பனையை அதிகரித்துள்ளது.

ஆனால், டிராக்டர் விற்பனை தரவு என்பது விவசாய சமூகத்தின் மிகச் சிறிய பகுதிதான். இது எந்த வகையிலும் குறு விவசாயிகளின் நிலையை பிரதிபலிக்காது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு டிராக்டரை வாங்க ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவாகும். ஒரு சராசரி விவசாயி அந்தளவு மதிப்புள்ள ஒரு டிராக்டரை வாங்குவது கடினம்.

கரோனா நெருக்கடியில் பிற தொழில்கள் நிலையானயதல்ல என முடிவுக்கு வந்த சிலரால் இந்த விற்பனை அதிகரித்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், டிராக்டர்கள் தற்போது வணிக நடவடிக்கைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் மீது அரசாங்கம் எந்தவொரு கலால் வரியையும் வசூலிக்கவில்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கூலிக்கு டிராக்டர் ஓட்டி வந்த நிலையில், தற்போது சொந்தமாக புதியதாக டிராக்டர் ஒன்றை வாங்க உள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயி ராஜேந்திரன், பலரும் விவசாயத்தில் ஈடுபாடு காட்டுவதால் வருங்காலத்தில் இத்துறை இன்னும் வளர்ச்சி அடையும் என்கிறார்.

பராம்பரிய தொழிலான விவசாயம், தற்காலத்திலும் வருமானம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால்தான் பலரும் விவசாயத்தை நோக்கி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், பூச்சி மருந்துகள் மானிய விலையில் வழங்குகின்றன. இதுவும் விவசாயம் மீதான ஆர்வத்தை அதிகரித்திருக்கலாம். அதோடு, உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களுக்கு ஆதார விலை, குளிர்பதன சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தால் விவசாயம் மேலும் வளர்ச்சி அடையும் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பாலசுப்பரமணி.

தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்?

கரோனா பல தொழிற்துறைகளை முடக்கினாலும் கூட அந்த நேரத்தில் விவசாயிகள் ஓய்வெடுக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த பேரிடர் காலத்திலும் விவசாயிகள் வயலுக்குச் செல்வதில் தயக்கம் காட்டவில்லை. அந்த நேரங்களில் உழுவதற்கு ஆள் கிடைக்காத காரணத்தினால் சிலர் டிராக்டர் வாங்கும் முடிவை எடுத்துள்ளனர். அதனால் தான் இந்த நெருக்கடியிலும் டிராக்டரின் தேவை அதிகரித்துள்ளது. விவசாயமும் பின்னடைவைச் சந்திக்கவில்லை.

மேலும், டிராக்டர் விற்பனை விவசாயிகளின் கொள்முதலால் மட்டுமல்லாமல், தற்போது வேலையிழந்த ஐடி ஊழியர்கள், வாடகைக்கு லாரி ஓட்டுபவர்கள் என பலதரப்பட்டவர்களாலும் அதிகரித்துள்ளது என்பது தான் கள எதார்த்தம்.
இதையும் படிங்க:டிராக்டர் விற்பனை அதிகரிப்பு, கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சியா?

Last Updated : Oct 17, 2020, 11:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details