நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு யாரும் அவசியம் இல்லாமல் வரக்கூடாது என்பதற்காக அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு மனுக்களை அளிக்கும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியர் மெகராஜ், எஸ்.பி.அருளரசு, ஆகியோர் பார்வையிட்டனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு அலுவலர்களை தவிர தேவையில்லாமல் வருவோரை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். அதே சமயம் அரசு அலுவலர்களையும் அடையாள அட்டை உள்ளிட்ட சோதனைகளை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு தேவையில்லாமல் வருவோரை தடுக்கும் வகையில் நுழைவாயில் முன்பு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டிகளில் கோரிக்கை மனுக்களை செலுத்தினால் உரிய பதில் அளிக்கப்படும். நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தாலே கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கலாம். பொதுமக்கள் தங்கள் தேவைக்கான இ-பாஸ்களை ஆன்லைன் மூலம் பெற வேண்டும்.