தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோழிப்பண்ணை விவகாரம் : அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு - நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்: கோழிப்பண்ணைகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பது குறித்து ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Poultry pollution - green tribunal order
Poultry pollution - green tribunal order

By

Published : Aug 21, 2020, 1:13 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த பிரபா என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள ஆரியகவுண்டபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கோழி பண்ணையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள எவ்வித விதிகளையும் பின்பற்றவில்லை. நிலத்தடி நீர் குறைந்த பகுதியான ஆரியகவுண்டபட்டியில் இயங்கி வரும் கோழிப்பண்ணை எவ்வித அனுமதியும் பெறாமல் நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சி எடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கோழிபண்ணையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதோடு உரிய இழப்பீடு தொகை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே. ராமகிருஷணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய் தாஸ்குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளிலும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றி இயங்குகின்றனவா, அங்கு உற்பத்தியாகும் கழிவுகள் அனைத்தையும் முறையாக அப்புறப்படுத்தப்படுகின்றனவா, நிலத்தடி நீரை எடுப்பதற்கு அனுமதி பெற்றுள்ளனரா என ஆய்வு செய்ய ஆட்சியர், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அலுவலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அலுவலர் தலைமையில் குழு அமைத்து நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கோழி பண்ணைகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், ஆய்வின்போது கோழிப்பண்ணைகளில் விதிமுறைகளை மீறி இருந்தால் அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுத்தியிருந்தால் உரிய இழப்பீடு தொகை நிர்ணயித்து அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். அந்த அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details