ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத கோயில் திருவிழா நாமக்கல்:ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். அதுவும் அம்மனை அதிகமாக வழிபடுவது பெண்கள் தான் என்ற நம்பிக்கைக்கு ஒரு சில அம்மன் கோயில்கள் விதிவிலக்காக உள்ளன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற பொங்களாயி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடாவெட்டி, பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு திருவிழாவானது கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று பூச்சாட்டுகளுடன் துவங்கியது. முன்னதாக பொங்களாயி அம்மன் மற்றும் விநாயகர் சாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்து படையல் மற்றும் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது.
போதமலைப்பகுதியில் 250 வருடங்களுக்கு முன்பு, பொங்களாயி என்ற பெண் வாழ்ந்து வந்ததாகவும், அவர், கர்ப்பிணியாக இருக்கும்போது, பிரசவத்திற்காக மலையிலிருந்து கீழே இறங்கி வந்ததாகவும், அப்போது பெண்கள் யாருமே அவருக்கு உதவி செய்யாததால், அப்பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துள்ளது. உடனே, அந்த பொங்களாயி கோபமுற்று இந்தப் பகுதி மக்களுக்கு சாபம் தந்துவிட்டு மறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால் இந்தப் பகுதிகளில் பஞ்சம், பட்டினி ஏற்பட்டதாகவும், அதன் பிறகு இங்குள்ள ஆண்கள் மட்டும் ஒன்று சேர்ந்து, நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, இப்படி ஒரு விழாவை பொங்களாயிக்கு நடத்துவதாகவும் கோயிலின் தல புராணத்தை சொல்கின்றனர், அப்பகுதி மக்கள்.
மேலும் இப்படி ஒரு விழா எடுத்த பிறகு பஞ்சம் நீங்கி மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதாம். அதுமட்டுமல்ல, இப்படி நேர்த்திக்கடன் செலுத்துவதால், இதன் மூலம் நோய் நொடி நீங்குவதுடன், விவசாயமும் செழிக்கும் என்ற நம்பிக்கை இந்த ஊர் மக்களிடம் உள்ளது. இரவு சுமார் 12 மணியளவில் சமபந்தி விருந்தில் 177 கிடாக்களை வெட்டி 500 கிலோவுக்கு மேலான அரிசியை பொங்கல் வைத்து அதனை உருண்டையாக செய்து தங்களது காணிக்கைகளை அம்மனுக்கு படைத்து வருகின்றனர்.
கிடாக்களை சுவாமிக்கு முன் பூஜை செய்து பலி கொடுத்த பின், அங்கேயே சமைத்து அதிகாலையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் ஒரு பிடி பிடிக்கின்றனர். இந்த விருந்தில் சுற்றுவட்டார கிராமங்களான புதுப்பட்டி, ராசிபுரம் மற்றும் சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, முதல் சென்னை என பல்வேறு ஊர்களில் உள்ள 5000க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.
எக்காரணத்தைக் கொண்டும் இவ்விழா நடைபெறும் நேரத்தில் பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை கூட, ஆண்கள் பயன்படுத்துவதில்லை எனவும், இந்த கோயில் பொருட்களை பெண்கள் தொடவும்மாட்டார்களாம். மேலும் பெண்களும் இந்த விழா நடக்கும்போது, அந்தப் பகுதிக்கு வருவதில்லை எனப் பல்வேறு விதிமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளதால், ஆண்கள், குழந்தைகள் மட்டுமே இதில் பங்கேற்கிறார்கள்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் கோலாகலமாக நடந்த 'தேங்காய் சுடும்' பண்டிகை!.. பண்டிகையின் சிறப்பு என்ன?