நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் திருச்செங்கோடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வரும் அனைத்து இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் தலைக்கவசம் இல்லையெனில் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டிருந்தார்.
எனவே தலைக்கவசம் அணிந்து வருபவர்களை மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காவல் துறையினர் அனுமதித்தனர். இந்நிலையில், இன்று திங்கள்கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது இருச்சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தனது தலைக்கவசத்தின் மேல் முட்கள் போன்ற ஒன்றினை அமைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டார். அப்போது அவரை மடக்கிப் பிடித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முட்கள் ஒட்டப்பட்ட தலைக்கவசத்துடன் வந்த இளைஞர் விசாரணையில் அவர், திருமலைப்பட்டியைச் சேர்ந்த கிஷோர் என்பது தெரியவந்தது. மேலும் இருச்சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் கறுப்பு வண்ணத்தில் எச்சரிக்கை என்ற வாசகம் அடங்கிய காகிதத்தையும் அந்நபர் ஒட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து காவல் துறையினர், அவர் வாகனத்தில் ஒட்டப்பட்ட கறுப்பு வண்ண எச்சரிக்கை வாசக ஸ்டிக்கர்களை நீக்கி, இதுபோன்ற தவறுகளைச் செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பினர்.
இதையும் படிங்க: பத்து மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை - கஞ்சா வியாபாரிகள் கைது