தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலப்பிரச்னை: புகார் அளித்தவரை தாக்கிய காவல் ஆய்வாளர்! - land problem case namakkal

நாமக்கல்: நிலப்பிரச்சனை தொடர்பாகப் புகார் அளிக்கச் சென்றவரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

namakkal

By

Published : Nov 9, 2019, 7:36 PM IST

நாமக்கல் அடுத்துள்ள திருமலைப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்துள்ளதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாக நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் செங்கோடன் சரவணனின் நிலத்தில் சாலைபோட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கணேசனிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் புகார் மனு அளித்தார்.

சரவணன் அளித்த புகார் மனுவை மீண்டும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசனே விசாரிக்க பரிந்துரை செய்து காவல் கண்காணிப்பாளர் சரவணனை அனுப்பியுள்ளார். பின்னர் மனுவை விசாரித்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசன் புகார் அளித்த சரவணனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

காவல் ஆய்வாளர் தாக்கியதாக சரவணன் குற்றச்சாட்டு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், காவல் ஆய்வாளர் கம்பி, கட்டை உள்ளிட்டவற்றால் தன்னை தாக்கியதாகவும் நிலத்தினை செங்கோடனுக்கு விட்டுத் தருமாறு கூறியதாகத் தெரிவித்தார். வழக்கினை திரும்பப்பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் சரவணன் கூறினார்.

காவல் ஆய்வாளர் தாக்கியதால் கால், கைகள், மார்பு பகுதியில் பலத்தக் காயம் ஏற்பட்டதாகவும் தனது உயிருக்கு ஏதேனும் என்றால் காவல் ஆய்வாளர் கணேசன்தான் காரணம் என்றும் சரவணன் தெரிவித்தார்.

காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் கேட்டபோது, ஆய்வாளர் தாக்கவில்லை என்று தெரிவித்தார். சரவணனை ஆய்வாளர் கைது செய்துவிடுவார் என்ற அச்சத்தில்தான் மருத்துவமனையில் சரவணன் சேர்ந்துள்ளார் என்றும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: காவலரின் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

ABOUT THE AUTHOR

...view details