நாமக்கல்:திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்கள் நாகஜோதி தினேஷ் தம்பதிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. உடல்நிலை சரியில்லாததால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் அனுராதா என்பவர், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த லோகாம்பாள் என்பவருக்கு தகவல் கொடுத்து அவர் மூலம் இரண்டு லட்ச ரூபாய் தருவதாக பேரம் பேசி குழந்தையை விற்க வற்புறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் நகர போலீசார் மருத்துவர் அனுராதா, குழந்தை விற்பனை புரோக்கர் லோகாம்பாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையில் இவர்கள் இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்து இருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆள் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணை நடந்துவரும் நிலையில் மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.