நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அக்கரைப்பட்டிபாளையம் பகுதியில் ஸ்ரீசாய்பாபா பாலிடெக்னிக் கல்லூரி கடந்த 2016ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2016 முதல் 2019ஆம் ஆண்டுவரை இந்த கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர்.
மூன்றாம் பருவ தேர்வுகள் வரை முறையாக நடத்திய கல்லூரி அதன் பிறகு பருவ தேர்வுகள் மட்டுமே நடத்தியிருந்தது. செய்முறை தேர்வுகள் நடத்துவதற்கு கல்லூரி நிர்வாகத்திடம் வசதி இல்லாத காரணத்தால் அந்த தேர்வை நடத்தாமல் தள்ளிப்போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூன்றாண்டுகள் படிப்பு நிறைவு பெற்ற பிறகும் செய்முறை தேர்வுகள் எதுவும் நடத்தப்படாததால் அந்த மாணவர்கள் பட்டயங்களைப் பெறமுடியாத சூழலில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் மாணவர்கள் புகார் மனு அளித்தனர். பின்னர் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட ஆட்சியர், வருகின்ற 24ஆம் தேதி கல்லூரி தரப்பிலிருந்தும் மாணவர்கள் தரப்பிலிருந்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.