நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு தொட்டிபாளையத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கபிலர்மலை, பெரிய சோளிபாளையம் வழியாகச் செல்லும் இந்த பிரதான சாலையைக் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமான கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களாக அப்பகுதியில் நாள்தோறும் பெய்த கனமழையால் சாலையில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுநாள் வரை மழைநீர் தேங்காமல் இருந்தது. ஆனால், தனியார் பட்டா நிலத்தின் உரிமையாளர் அவரது நிலத்திற்குச் சுற்றுச்சுவர் அமைத்ததால் மழைநீர் வெளியே செல்ல வழியின்றி, சாலையில் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.