நாமக்கல்:பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க பொக்லைன் இயந்திரம் மூலம் குழிகள் தோண்டும் பணி தொடங்கியன.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான வெங்கரை, பொத்தனூர், அனிச்சம்பாளையம், நன்செய்யிடையார், பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக மணல் திருட்டு நடைபெறுகிறது.
இதனை தடுக்க காவல்துறை, வருவாய்துறை, கனிமவளத்துறை ஆகிய துறைகளில் உள்ள அலுவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணல் திருட்டைத் தடுக்க குழிகள் தோண்டும் பணி அவ்வாறு இருந்தபோதிலும் சிலர் இரவு நேரங்களில் இருச்சக்கர வாகனங்களின் மூலம் காவிரி ஆற்றுப் படுகையில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில் மணல் திருட்டை தடுக்கும் வகையில், காவிரி கரையோரப் பகுதிகளுக்கு செல்லும் வழிகளில் குழிகள் தோண்ட நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து நன்செய்யிடையார், அனிச்சம்பாளையம், வெங்கரை, பரமத்திவேலூர் உள்ளிட்ட மணல் திருட்டு அதிகமுள்ள இடங்களுக்கு செல்லும் வழிகளில், பொக்லைன் இயந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டன.
மணல் திருட்டைத் தடுக்க குழிகள் தோண்டும் பணி இருச்சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மணல் திருட்டு தடுக்கப்படும் என காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.