நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தினம்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
மேலும், பரமத்தி வேலூர் வாழைத்தார் சந்தையிலும் விவசாயிகள் தங்களது வாழைத்தார்களை நேரடியாக கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வாழைத்தார் சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 550 வரை விற்பனையானது. ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ. 400க்கும், தேன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 350க்கும், கற்பூரவள்ளி ரூ. 450க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 6 முதல் ரூ. 7வரை விற்பனையானது.