நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள நன்செய் இடையாறைச் சேர்ந்தவர் சண்முகம் (60). இவரது இரு மகன்களும் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் நிலையில், தனது அன்றாடத் தேவைக்காக தனது வீட்டிலேயே கணினி ஒன்றின் மூலமாக புகைப்படம், வீடியோ எடிட்டிங் வேலைசெய்துவருகிறார்.
இந்தத் துறையில் அனுபவம்வாய்ந்தவரான இவர், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த புகைப்பட ஸ்டூடியோ மற்றும் வீடியோ எடுக்கும் நபர்களுக்கு ஆல்பம் தயாரித்துக் கொடுத்து அதற்கு கட்டணமும் பெற்றுவருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் இவர் தனது கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அது என்ன தகவல் என்று பார்க்க உள்நுழையும்போது இவரது கணினி முற்றிலும் முடங்கியது.
இதனைத்தொடர்ந்து வந்த மற்றொரு குறுந்தகவலில் வரும் 72 மணி நேரத்தில் 490 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 70 ஆயிரம் ரூபாய்) செலுத்தினால் மட்டுமே கணினி சரிசெய்து தரப்படும் எனவும் பணம் செலுத்தாவிட்டால் கணினியிலுள்ள அனைத்து விவரங்களும் அழிக்கப்படும் என்றும் அடையாளம் தெரியாத நபர்களால் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.