நாமக்கல்லில் நடைபெற்ற வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லியை நோக்கி படையெடுத்தால் நிலை என்னவாகும் என யோசித்து மத்திய அரசு உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும், வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும், விவசாயிகளை பாரமாக நினைத்தால் அதன் பாதிப்பை சந்தித்து ஆக வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ரஜினி கட்சி தொடங்கவுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈஸ்வரன், "யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம். அதிமுகவில் உள்ளதுபோல் தங்கள் கூட்டணியில் இரண்டு நிலைப்பாடு இல்லை. தற்போது ரஜினியைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை, ரஜினியால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" எனத் தெரிவித்தார்.