நாமக்கல்லை அடுத்த பெரியப்பட்டி நரிக்குறவர் காலனியில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் ஊசி மணி, பாசி மணி கோர்த்து விற்பது, அழகு சாதன பொருள்களை வீதி, வீதியாகச் சென்று விற்பது, புறா உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி விற்று அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தங்களது குடும்பங்களை நடத்திவந்தனர்.
கரோனா பாதிப்பால் கடந்த 22 நாட்களுக்கும் மேலாக தங்களது வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் தங்களுக்கு எவ்வித வருமானமும் இல்லை. அரசு வழங்கிய கரோனா நிவாரணத் தொகை பலருக்கும் கிடைக்காத நிலையில் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை உணவுகூட கிடைக்காமல் மூன்று வேளையும் நீரை மட்டுமே அருந்தி வரும் நிலை உள்ளது. இதனை போக்கிட அரசு தங்களுக்கு உதவிகளை செய்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தினசரி வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பங்களை அவர்கள் நடத்திவந்த நிலையில், கடந்த 22 நாட்களாக எவ்வித பணிக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் இதுநாள்வரை நியாய விலைக் கடையில் கிடைத்த அரிசியை கொண்டு சாப்பிட்டு வந்தோம். அதுவும் தற்போது தீர்ந்துவிட்டது. இனி உணவுக்கு வழியில்லாத எங்களுக்கு அரசு உதவிட வேண்டும் என நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ரேகா கோரிக்கை வைத்திருந்தார்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பானுமதி கூறுகையில், “பாசி மணி கோர்த்தாலும், அதை விற்க முடியாத நிலை உள்ளதால் எங்களுக்கு 22 நாட்களுக்கு மேலாக எந்தவித வருமானமும் இல்லை. போதிய வருமானம் இல்லாத நிலையில் உணவுக்கு வழியின்றி பட்டினியால் உயிரிழப்புதான் ஏற்படும், இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
மேலும், பெரியபட்டி நரிக்குறவர் காலனியில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இதில் பாதி குடும்பங்களுக்கு குடும்ப அட்டை இல்லாத நிலையில் அரசு வழங்கிய கரோனா நிவாரண தொகை கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். மேலும், தங்கள் பகுதிக்கு போதிய குடிநீர் வசதிகூட இல்லாத நிலையில் உணவுக்கு அரசு அலுவலர்கள் வழி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வாக்குகளுக்காக நடையாய் நடக்கும் அரசியல் கட்சியினர் தற்போது நிலவி வரும் பஞ்சத்தால் தங்களுக்கு எவ்வித உதவிகள் வழங்கவில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்த சரத்குமார் கூறினார்.
இதனையடுத்து, வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் வேலையிழந்த நிலையில் அவர்களுக்கு அரசுகள் உதவி செய்வதுபோல் சொந்த மாநிலத்தில் அகதிகள்போல் வாழும் இம்மக்களுக்கும் அரசு உதவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் அம்மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். மேலும் அவர்களுக்கு சுகாதாரத் துறையினர் சார்பில் உடல் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளையும் வழங்கினார்.