நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிவரும் தட்டச்சர்கள், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட மூன்று பேருக்கும், நகராட்சி அலுவலகம் அருகில் செயல்படும் தினசரி சந்தை வியாபாரிகள் இரண்டு பேருக்கும், மாருதி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் ஆறு நபர்களுக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து நாமக்கல் நகராட்சி அலுவலகம், தினசரி காய்கறி சந்தைப் பகுதிகள் ஆகியவை மூடப்பட்டு, காய்கறி சந்தைப் பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் நகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சந்தையின் பிரதான நுழைவுவாயில் மூடப்பட்டிருந்த போதிலும் பின்புற வாயில் வழியாக மக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்று வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நோய்த்தொற்று குறித்து எத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்திவரினும் சிலர் அறியாமையால் செய்யும் செயலால் பலர் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.