தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இனிமேல் யாரும் கருமுட்டை தானம் செய்யாதீங்க' - அனுபவத்தைப் பகிரும் பெண்! - How to donate Embryo

பணத்துக்கு ஆசைப்பட்டு கருமுட்டை தானம் செய்யும் பல பெண்கள் அதற்குப் பிறகு கசப்பான அனுபவங்களைச் சுமக்கின்றனர். அவர்கள் கூறும் ஒரே சொல், 'இனிமேல் யாரும் கருமுட்டை தானம் செய்யாதீங்க'. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேதனையைப் சுமக்கும் இவர்கள் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

கசப்பான அனுபவத்தை பகிரும்  பெண்
கசப்பான அனுபவத்தை பகிரும் பெண்

By

Published : May 22, 2020, 12:07 PM IST

கருமுட்டை தானம் செய்வதால் கொஞ்சம் பணம் கிடைக்கிறதே தவிர வேறு நன்மைகள் ஏதும் கிடைப்பதில்லை. குடும்ப வறுமை, கல்லூரியில் காணும் விளம்பரங்கள் எனப் பல்வேறு காரணிகள் பெண்களை கருமுட்டை தானத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதற்காக அவர்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்குப் பயணிக்கின்றனர்.

இயல்பாகவே, பெண்களுக்கு கருப்பையில் உருவாவது ஒரு கருமுட்டைதான். ஆனால், தானத்திற்கு இது போதுமானதல்ல. இதனால், அதிக முட்டைகளைச் செயற்கையாக வரவழைக்க ஹார்மோன் ஊசி போடப்படுகிறது.

நவீன அறிவியல் உலகத்தில் இயற்கையான கருத்தரித்தல் என்பது நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்து, தற்போது செயற்கை கருத்தரிப்பு, வாடகைத் தாய் முறை உலகம் முழுவதும் அதிகரித்துவருகின்றன. வெறும் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு தங்களது கருமுட்டைகளை விற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரபாளையம் பெண்கள்.

கருமுட்டை தானம் வழங்குதல் - வரைபடம்

இந்தப் பகுதியில் பெண்களிடம் பணத்தாசையை மட்டுமே காட்டி அணுகும் இடைத்தரகர்கள் பின்விளைவுகள் இல்லையென மழுப்புகின்றனர். கருமுட்டை தானம்தானே! என்ன வந்துவிடும்? என அறியாமையால் அலட்சியம் காட்டும் பெண்களுக்குப் பிற்காலத்தில் கர்ப்பப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், மன ரீதியான பிரச்னைகள் என அனைத்தும் வரும் இடர் உள்ளது.

இது தெரியாமல் தானம்செய்யும் பெண்களின் கருமுட்டைகளின் வெப்பத்தைக் குறிப்பிட்ட அளவிற்கு மாற்றி திரவ நைட்ரஜனில் உறையவைத்து அதிகளவில் லாபம் பார்க்கிறது தனியார் மருத்துவமனை.

கருமுட்டை தானத்தின் தீமைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத பெண்கள் அடிக்கடி கருமுட்டை தானத்திற்குச் செல்கின்றனர். ஹார்மோன் ஊசியால் பெண்களின் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மனதை பதைபதைக்கச் செய்கிறது.

சொற்ப பணத்திற்கு கருமுட்டை தந்து உடல்நலத்தை இழக்கும் பெண்கள்

ஹார்மோன் அளவுக்கு மீறினால் இறப்பையும் உண்டாக்கும். பெரும்பாலும் இந்தக் கருமுட்டை தானம் செய்பவர்கள் ஏழைகளாகவும் - பெறுபவர்கள் செல்வந்தர்களாகவும் இருக்கின்றனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது குடும்பத்தின் நிலை கருதி இடைத்தரகரின் பேச்சை நம்பி 30 ஆயிரம் ரூபாய்க்கு கருமுட்டையைத் தானமாக கொடுத்ததாகவும், அதன் பின்னர்தான் பின்விளைவுகள் தெரியவருவதாகவும், தன்னால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடிவதில்லை என்றும் புலம்புகிறார்.

"இடைத்தரகர்களை நம்பி இளம்பெண்கள் பலர் தங்களது கருமுட்டைகளை விற்கின்றனர். இது தவறானது. சில ஆயிரங்களுக்காகத் தங்களது வாழ்க்கையை இழக்க வேண்டாம்" எனத் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வேதனையை மற்ற பெண்களுக்குப் பகிர்கிறார் இவர்.

இந்திய மருத்துவச் சங்கத்தின் மகளிர் பிரிவின் மாநிலத் தலைவர் சித்ரா பேசுகையில், "பெண் ஒருவர் தன் வாழ்நாளில் இருமுறை மட்டுமே கருமுட்டை தானம் செய்ய வேண்டும். அதுவும் ஆறு மாத இடைவெளியில் மட்டுமே தானம் செய்ய வேண்டும.

ஆனால் பெண்கள் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக தொடர்ச்சியாக கருமுட்டைகளைத் தானம் செய்துவருவதால் மேனபாஸ் என்ற மாதவிடாய் பிரச்னை, எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

பெரும்பாலும் கருமுட்டை தானம் செய்பவர்களுக்கு உயிரியல் செயல்பாடு குறித்து தெரிவதில்லை. அவர்களின் வாழ்க்கை முறைகள் அவர்களுக்கு வறுமையை காட்டுகிறதே தவிர சுரண்டலைக் சுட்டிக்காட்டவில்லை.

தொடர்ச்சியான கருமுட்டை தானம் பண நெருக்கடியைத் தீர்க்காமல் அவர்களின் உயிரைத் தீர்த்துவருகிறது. இதையெல்லாம் அவர்கள் அறிவதற்குள் குறைந்தது ஐந்து முறை கருமுட்டை தானம் செய்துவிடுகின்றனர்.

'கருமுட்டை தானம் கசப்பான அனுபவம்' - சிறப்புத் தொகுப்பு

இதற்கு ஆறு மாத கால இடைவெளியைப் பரிந்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு கோட்டைவிட்டது. நிழல்போல சமூகத்துக்குள் தங்களது பிரச்னைகளை மறைத்துக்கொள்ளும், தங்களுக்கு இனியாவது விடிவுகாலம் பிரசவிக்குமா? என இருளில் காத்திருக்கிறார்கள் குமாரபாளையம் கருமுட்டை நன்கொடையாளர்கள்.

இதையும் படிங்க;

'முட்டுக்குச்சு' - இந்த சமூகத்தின் சாபக்கேடு!

ABOUT THE AUTHOR

...view details