நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அடுத்த பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பில்லூர், சங்கநாயக்கன்பட்டி, வில்லிபாளையம், குச்சிபாளையம், மேற்குபுதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் வைப்புத்தொகை செலுத்தி கணக்குகளை பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி கூட்டுறவு கடன் சங்கத்தில் வைப்பு தொகை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய அலுவலர்கள் "உங்களிடம்" விசாரணை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர். நோட்டீசை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அலுவலர்களிடம் சென்று கேட்டபோது, "நீங்கள் பராமரித்து வந்த வைப்புத் தொகையை போலி கையெழுத்திட்டு ரூபாய் 80 லட்சத்துக்கும் மேல் கூட்டுறவு சங்க செயலாளர் வெங்கடேசபெருமாள் கையாடல் செய்துள்ளார்" என்ற கூறியுள்ளனர்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மோசடி குறித்து சங்க செயலாளர்களிடம் கேட்டபோது பணத்தை விரைவில் தந்து விடுவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால், பலநாட்கள் ஆகியும் பணத்தை வழங்காததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், சங்கச் செயலாளர், அலுவலர்கள் அலுவலங்கத்துக்கு வரவில்லை.