நாமக்கல்மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பெரும்பாலான இடங்களில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
மாவட்டத்தின் பெரிய நகராட்சியாக விளங்கும் நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ள நிலையில் 22, 25 வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 37 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 29ஆவது வார்டில் மட்டும் அதிமுக வெற்றி பெற, மீதமுள்ள 36 வார்டுகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
திமுக கூட்டணி அமோக வெற்றி
நாமக்கல் நகராட்சியில் இந்த வெற்றி இதுவரை பெரும் வெற்றியாக அமைந்துள்ளது. ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ள நிலையில் 1,10 வார்டுகளில் அதிமுகவும், 10ஆவது வார்டில் சுயேட்சை வெற்றி பெற மீதமுள்ள 24 வார்டுகளை திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 19 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்ற, அதிமுக 8 இடங்களிலும், சுயேட்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற, பாஜக ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. பள்ளிபாளையம் நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 21 வார்டுகளில் திமுக 12 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்று இந்த நகராட்சியையும் திமுக கைப்பற்றி உள்ளது.