நாமக்கல்: நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 416 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்குச் செப்டம்பர் மாதமும் சுங்க கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் 43 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச்சாவடிகள் தனியார் வசம் உள்ளன. மீதமுள்ள 14 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் உள்ளன. ஆனாலும், கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாண்டு ஒரு பாதி சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதலும் மறுபாதி சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியான இன்று முதலும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு பகுதியாக நாமக்கல் அடுத்த ராசாம்பாளையத்தில் நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் என்.கே டோல் & ரோடுவேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சுங்கச் சாவடியில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, கார்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு 60 ரூபாயில் எவ்வித மாற்றம் இல்லாத நிலையில், பலமுறை பயணத்திற்கு 85 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்ந்து 90 ரூபாயாகவும், இலகு ரக வாகனங்கள் ஒரு முறை பயண கட்டணம் 100 ரூபாயிலிருந்து எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில், பலமுறை பயணத்திற்கு 150 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்ந்து 155 ரூபாயாகவும், பேருந்துகள், லாரிகள் ஒரு முறை பயணத்திற்கு 200 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்ந்து 205 ரூபாயாகவும், பலமுறை பயண கட்டணம் 305 ரூபாயில் எவ்வித மாற்றம் இல்லாத நிலையில், மல்டி ஆக்ஸில் வாகனங்கள் ஒருமுறை பயணத்திற்கு 325 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்ந்து 330 ரூபாயாகவும், பலமுறை பயணத்திற்கு 485 ரூபாயிலிருந்து 10 ரூபாய் உயர்ந்து 495 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாகச் சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.