நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியை சேர்ந்த சிற்பி ஜெகதீசன். இவர் பரம்பரை பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சிற்ப தொழிலில் புதுமையை புகுத்தி வித்தியாசமான சிலைகளை செய்வதில் வல்லவர். இவர் செய்த ஒற்றை கல்லினால் ஆன சங்கிலி மிகவும் தத்ரூபமாக இருக்கும்.
அதேபோல் ஒற்றை கல்லில் தேர் மற்றும் புல்லாங்குழலை செய்து, 2009ஆம் ஆண்டு அப்போதைய வெளியுறவு துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி கைகளால் தேசிய விருது பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கல்லினால் ஆன விநாயகர் சிலை, மாடம் மற்றும் படகுகளை செய்து அசத்தியுள்ளார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் அந்த விநாயகர் சிலை, மாடம் மற்றும் படகுகள் தண்ணீரில் மிதக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். இவரது தண்ணீரில் மிதக்கும் கல் விநாயகரை அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தண்ணீரில் மிதக்கும் கல் விநாயகர் இதுகுறித்து சிற்பி ஜெகதீசன் கூறுகையில், “பரம்பரை பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறான விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளேன். தண்ணீர் மிதக்கும் வகையில் அதன் எடைக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளேன். ஏற்கனவே இதுபோன்று புதுவிதமாக பல சிற்பங்களை வடிவமைத்துள்ளதன் அடிப்படையில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு ஆண்டில் 355 நாட்கள் காவல் நிலையத்திலும் 10 நாட்கள் கோயிலிலும் வைக்கப்படும் விநோத விநாயகர்