தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் வருகின்ற டிசம்பர் 27 , 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமாண்டபாளையத்தில், தலைவர் பதவிக்குப் பெண்கள் பொதுப் பிரிவு ஒதுக்கப்பட்டது.
இந்த ஊராட்சிக்கு பெரமாண்டம்பாளையம், முத்தூர், வேட்டுவம்பாளையம், ஆண்டிபாளையம், மோனக்கவுண்டனூர், ராமசாமிக்கவுண்டனூர், ஓலப்பட்டி, நொச்சிப்பட்டி என்னும் கிராமங்கள் உள்ளன. இங்கு பெண் வாக்காளர்கள் 1049 பேர், ஆண் வாக்காளர்கள் 968 பேர் என மொத்தம் 2017 வாக்காளர்கள் உள்ளனர்.
ஊராட்சி மன்ற தலைவர் பதவி 2.75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் இந்நிலையில், நேற்று இரவு ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு ஏலம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நொச்சிப்பட்டியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது மனைவி காந்தாமணி(50) ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு ரூபாய் 2.75 லட்சம் ரூபாய் செலுத்தி ஏலம் எடுத்ததாகவும், எனவே அவர் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்குக் கிராம மக்களால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்குத் தெரிய வர பெரமாண்டபாளையம் ஊராட்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்ய வேண்டிய பதவி ஏலம் விடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'ஒரு கிலோ வெங்காயம் ரூ. 10 மட்டுமே...' - ஸ்தம்பித்துப் போன கடலூர்