நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு வணிக சங்கங்களின் பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தக் கூட்டம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வினையடுத்து 34 வகையான தனிக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தனிக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சோப்பு பயன்படுத்தி கைகளை தூய்மைப்படுத்த வேண்டும், தகுந்த இடைவெளி பின்பற்ற வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.