பருத்தி ஏலம் - விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! - பருத்தி மூட்டைகள் விலை அதிகரிப்பு
நாமக்கல்: பருத்தி ஏலத்தில்2 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூபாய் 25 லட்சத்திற்கு ஏலம் போனதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 வார காலமாக கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று ( ஜூலை 14) பருத்தி ஏலம் நடைபெற்றது.
இதில் நாமக்கல், சேந்தமங்கலம், பவித்ரம், துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி முட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 869 முதல் ரூ. 4 ஆயிரத்து 839 வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் 2 ஆயிரம் மூட்டைகள் 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த விலை ஜீன் மாத விலையை விட கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த ஏலத்தில் சேலம், மகுடஞ்சாவடி, திருப்பூர், ராசிபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்திகளை கொள்முதல் செய்தனர்.