நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், மூன்று பேர் டெல்லி சமய மாநாட்டிற்கு சென்றுவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஒரு செவிலியும், ஒரு தூய்மைப் பணியாளரும் அடங்குவர்.
கடந்த 13ஆம் தேதி லத்துவாடி பகுதியைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கர்ப்பிணி பெண்ணை பரிசோதனை செய்த கிராம சுகாதார செவிலி, அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பெண் ஆகிய இருவரிடமும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்தனர்.