நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடந்த குழந்தை விற்பனை தொடர்பாக ஓய்வுப் பெற்ற செவிலியர் அமுதா உட்பட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இவர்கள் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு சுமூகமாக நடைபெறவும், வழக்கில் வெளிநாடு வரை குழந்தை விற்பனை நடைபெற்று இருப்பதால், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று, இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
குழந்தைகள் விற்பனை வழக்கு: குற்றவாளிகள் 8 பேரின் பிணை மனுக்கள் தள்ளுபடி
நாமக்கல்: ராசிபுரம் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான செவிலியர் அமுதா உட்பட எட்டு பேரின் பிணை கோரிய மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த சிபிசிஐடி குழுவில் சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் ஆய்வாளர் பிருந்தா உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு நேற்று முன்தினம் முதல் தனது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். செவிலியர் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் அருள்சாமி ஆகியோரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கைதான அமுதா உட்பட எட்டு பேர் நாமக்கல் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்நிலையில், பிணை கோரிய மனுக்களின் விசாரணை, நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. நீதிபதி இளவழகன் முன்னிலையில் மனுக்களின் விசாரணை தொடங்கியது. விசாரணைக்கு பின்னர் எட்டு பேரின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.