“நேராமல் கற்றது கல்வி அன்று” (முது. அல்லபத்து. 6)
கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு, உதவாமல் கற்றது கல்வி ஆகாது. ஆசிரியருக்கு பொருள் தந்து கற்க வேண்டும் என்பதனை முதுமொழிக் காஞ்சியில் அல்ல பத்து எடுத்துரைக்கிறது.
இப்படி ஆசிரிய மாணவரின் பிணைப்பு என்பது சங்க இலங்கியம் முதற்கொண்ட சமகாலம் வரை கரை கட்ட முடியாத பெருங்கடலாய் விருந்துதான் கிடக்கிறது. அப்படி தற்போது தங்களது ஆசிரியருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனர் முன்னாள் மாணவர்கள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைபள்ளியில் 31 ஆண்டுகள் தமிழாசிரியராக பணி புரிந்து வந்தவர் புலவர் வெங்கட்டராமன் (95). 1954ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை இந்த பள்ளியில் அவர் பணி புரிந்தார். புலவர் வெங்கட்டராமன் எளிய நடையில் தமிழை கற்றுக் கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார். அதுவும் திருக்குறளுக்கு விளக்கம் அளிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
ஆசிரியர் பணியோடு அவர் நிற்காமல், அந்த ஊரின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டி, ஆன்மிகத்திலும் அளவில்லாத ஈடுபாடு காட்டினார். ஓய்வு பெற்ற பிறகு ஏழ்மை அவரிடம் குடி கொண்டது. அவரிடமோ குடியிருக்க ஒரு சொந்த வீடு கூட இல்லை. இப்படி சிரமப்பட்ட நிலையில் வசித்து வந்த ஆசிரியரின் நிலைமை அவரிடம் படித்த முன்னாள் மாணவர்களுக்குத் தெரிய வந்தது.
தாய்மொழியை ஊட்டிய தமிழாசிரியருக்கு மனை கட்டிக்கொடுத்த முன்னாள் மாணவர்கள் இதையடுத்து தமிழாசிரியரிடம் பயின்று தற்போது பெரிய தொழிலதிபர்களாகவும், அரசு உயர் அலுவலர்களாகவும் இருக்கும் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு வீடு ஒன்றைக் கட்டி பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களின் முயற்சியால் 10 ஆண்டுகளுக்கு முன்பு குருசாமிபாளையத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் அழகிய வீடு ஒன்றை கட்டி எழுப்பியுள்ளனர். அந்த வீட்டிற்கு குரு நிவாஸ் என்றும் பொருத்தமான பெயரையும் சூட்டியுள்ளனர்.
ஆசிரியர் பணி அறப்பணியாக செய்து வந்ததாகவும், மாணவர்களிடையே மிகவும் அன்புடன் பழகியதால் தன்னை பெரியவர் என மாணவர்கள் அழைத்து வந்ததாகவும் தான் பாடம் கற்பித்த மாணவர்கள் தனக்கு வீடு ஒன்றை கட்டி கொடுத்து இன்று அமர வைத்துள்ளதாகவும் தன் மாணவர்கள் மருத்துவர்கள், ஆட்சியர்கள், காவல்துறை என அனைத்து துறையிலும் பணியாற்றி வருவதாகவும் தனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்கிறார் பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வெங்கட்டராமன்.
12 ஆண்டுகளுக்கு முன்பு புலவர் வெங்கட்டராமன் அவர்களை சந்திக்க ராசிபுரம் சென்ற போது அவர் குடியிருந்த வீடு மழைக்கு ஒழுது கொண்டிருந்ததை கண்டு மனம் வருந்தியதாகவும், அப்போதே அவருக்கு வீடு கட்டித் தர வேண்டும் என முடிவெடுத்து அவரிடம் படித்த முன்னாள் மாணவர்களிடம் நிதி திரட்டி குருசாமிபாளையத்தில் நிலம் வாங்கி 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டி கொடுத்துள்ளதாகவும், ஆசிரியர் வெங்கட்ராமன் மாணவர்களிடையே கண்டிப்புடன் நடந்து கொள்ளமாட்டார் எனவும் அனைவரிடமும் அன்புடன் பழகுவார் எனவும் குருநிவாஸ்ட வீட்டில் அவர் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருவது தன்னை போன்றோருக்கு மிகுந்த மனமகிழ்ச்ச்சியை அளிப்பதாக கூறுகிறார்கள் முன்னாள் மாணவர்கள் டாக்டர் மோகன்ராஜ் மற்றும் கோவிந்தராஜ்.
இதைப் பற்றி தமிழாசிரியரின் மகள் தனலட்சுமி கூறுகையில், தனது தந்தை ஆசிரியராக பணியாற்றிய போது அவருக்கு கிடைத்த ஊதியத்தை குடும்ப செலவுகள் போக ஏழை மாணவர்களின் கல்விக்கு அதிகளவு செலவிட்டு குடும்பத்திற்கு எதையுமே சேமிக்காத நிலையில், அவர் பணி ஓய்வு பெற்ற போது தாங்கள் வாடகை வீட்டில் வசித்தோம். அந்த நிலையை கண்டு அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் அவர் பணியாற்றிய ஊரிலேயே குருநிவாஸ் என்ற பெயரில் அவருக்கு வீடு கட்டி கொடுத்து அவருக்கு நன்றி கடன் செலுத்தியதை தாங்கள் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது என்கிறார்.
எழுத்தறிவித்தவன் எல்லா வல்லவனுக்கும் இணையானவன் என்பதை இக்கால மாணவர்களுக்கு எடுத்துரைத்த நாமக்கல் முன்னாள் மாணவர்கள் போற்றுதலுக்குரியவர்களே.
இதையும் படிங்க...‘வேலை கொடு’ - பரப்புரையை தொடங்கும் கர்நாடக இளைஞர் காங்கிரஸ்!