தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெண்கள் வார்டா ஆண்கள் வார்டா'... குழம்பிய அலுவலர்கள்... தேர்தலை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர்! - namakal local body election cancelled

நாமக்கல்: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரிகளின் குளறுபடியால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில், ஆண்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மாவட்ட ஆட்சியர் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

local body election
உள்ளாட்சி தேர்தல்

By

Published : Dec 20, 2019, 10:02 AM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 27, 30 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்டு 17ஆம் தேதியளவில் முடிவுடைந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றியங்கள், 322 கிராம ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - 17, கிராம ஊராட்சித் தலைவர் - 322, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் - 172, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் - 2,575 என, மொத்தம் 3,086 பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 148 பேர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 1,236 பேர், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1,751 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,795 என மொத்தம் 9,930 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 139 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியலும் அவர்களுக்கான சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளின் குளறுபடியால் நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் வார்டா... ஆண்கள் வார்டா...

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரப்பஞ்சோலை பஞ்சாயத்தில் மொத்தம் ஒன்பது வார்டுகள் உள்ளன. இதில் பழங்குடி இன பெண்களுக்கு 4 வார்டுகளும், பொதுப் பிரிவு பெண்களுக்கு 1 வார்டும், ஆண்களுக்கு 4 வார்டுகள் எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 2ஆவது வார்டு மாவார் கிராமம், பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது வார்டு என அச்சிடப்பட்டு ஒட்டியதால் , மாவார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், செல்வராஜ் என்பவர் கடந்த 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ரகசியமாக வேட்பு மனுவை ரிஜெக்ட் செய்த அதிகாரிகள்

இதைத் தொடர்ந்து, வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு வேட்பு மனுவும் அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இரண்டு வேட்பாளர்களும் தேர்தல் பணியைத் தொடங்கிய நிலையில் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் , தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் சேர்ந்து, முந்தைய நாள் நேற்று இரவு இருவர் வீட்டிற்கும் சென்று உங்கள் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இதனை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

அலுவலகத்தை முற்றுகையிட்ட வேட்பாளர்கள்

இதனையடுத்து நடராஜ் அப்பகுதி கிராம மக்களுடன் சேர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் தேர்தல் அலுவலர் ஆறுமுகத்திடம் கேள்வி எழுப்பி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பெண்களாக ஒதுக்கப்பட்ட வார்டு தங்களின் கவனக்குறைவால் பொதுப்பிரிவு என ஒட்டப்பட்டதால், ஆண்கள் வேட்பு மனுவைத் தெரியாமல் வாங்கியதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனால் இரண்டு பேரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஊர் மக்கள், வேட்புமனு தாக்கலின் போதே அறிவுறுத்தி இருந்தால், தாங்கள் கிராமத்தில் மாற்று ஏற்பாடு செய்திருப்போம். வேட்பு மனுவை ஏற்றுக் கொண்ட பிறகு பெண்கள் வார்டு எனக் கூறி தள்ளுபடி செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இது முழுக்க முழுக்க அதிகாரிகளின் குளறுபடியால் தான் நடத்துள்ளது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர்

தேர்தல் ரத்து

இப்பிரச்சனை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குச் செல்லவும், பெரப்பஞ்சோலை ஊராட்சியில் 2ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் விரைவில் வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும், அதிகாரிகளிடம் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கைத் தாக்கல் செய்யவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சரவணா ஸ்டோர்ஸ் அதிபரை மிரட்டி பணம் பெற்ற வழக்கறிஞர் முன்பிணை தள்ளுபடி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details