தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வீட்டைக் காணோம்' வடிவேலு பாணியில் கலெக்டரிடம் புகாரளித்த கூலித் தொழிலாளி! - Namakkal Poor Couple Compliant against Corrupted officers

நாமக்கல்: அரசு அலுவலர்கள் கட்டிக் கொடுத்த கான்கிரீட் வீட்டைக் காணோம் என கூலித் தொழில் செய்துவரும் தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

My house is Missing, Namakkal Poor Couple Compliant against Corrupted officers
My house is Missing, Namakkal Poor Couple Compliant against Corrupted officers

By

Published : Jan 25, 2020, 2:40 AM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருகூர் பஞ்சாயத்தில் பஞ்சப்பாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு முருகேசன் - கவிதா என்ற தம்பதியினர் கூரை வீட்டில் வசித்துவருகின்றனர். கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு மீனா (18) என்ற மகளும் பெரியசாமி (13) என்ற மகனும் உள்ளனர்.

குடிசை வீட்டில் வசித்துவந்த இவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தங்களுக்கு கான்கிரீட் வீடு வழங்குமாறு விண்ணப்பித்தனர். அதனை ஆய்வுசெய்த அரசு அலுவலர்கள், முருகேசன் - கவிதா தம்பதியருக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு பெறுவதற்கான தகுதி அட்டை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து வீடு அமைப்பதற்கான அடிப்படை பணிகளை செய்ய அவர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையில் முருகேசன் - கவிதா தம்பதியர் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளான அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் அதன்பின் வீடு கட்டுவதற்கான எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் இந்தத் தம்பதிக்கு கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களை முருகேசன் - கவிதா தம்பதியினர் பலமுறை நேரில் சந்தித்தும் மனுக்கள் கொடுத்தும் கேட்டுள்ளனர். எனினும் ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பான அலுவலரை சந்தித்தபோது தங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் இனி உங்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி வழங்க இயலாது எனவும் கூறியதை கேட்டு முருகேசன் - கவிதா தம்பதியர் பேரதிர்ச்சியடைந்தனர்.

அதன்காரணமாக கடந்த திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில், தங்களுக்கு கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டி கொடுக்காமலேயே வீடு கட்டி கொடுத்துவிட்டதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர் என முருகேசன் - கவிதா தம்பதியினர் புகார் மனு அளித்தனர்.

'வீட்டைக் காணோம்' ஆட்சியர் அலுவலகத்தில் கூலித் தொழிலாளி புகார்!
அந்த மனுவில், “2010ஆம் ஆண்டு கலைஞரின் கான்கிரீட் வீடு திட்டத்தில் வீடு பெறுவதற்கான தகுதி அட்டையைப் பெற்றோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான நிதியை எந்த அலுவலர்களும் ஒதுக்கீடு செய்யவில்லை. இது குறித்து அலுவலர்களிடம் கேட்டால் அவர்கள், தங்களுக்கு வீடு கட்டி கொடுத்தாயிற்று மீண்டும் பணம் ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவிக்கின்றனர்.
அலுவலர்கள் கட்டிக் கொடுத்ததாக கூறும் எங்களது வீட்டை காணவில்லை. எனவே அதனை கண்டுபிடித்துத் தர வேண்டும். மேலும, எங்களை அலைக்கழித்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எங்களுக்கு கான்கிரீட் வீடு அமைத்து தர வேண்டும்” என அதில் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த அலுவலர்களை அதிர்ச்சியடைச் செய்தது.
இந்த நிகழ்வைப் போன்று தமிழ் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் அரசு அலுவலர்களால் ஏமாற்றப்பட்டதால் நடிகர் வடிவேலு தனது கிணற்றைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அது நகைப்பு. ஆனால் இங்கு அன்றாடம் வாழ்வுக்காக கூலித் தொழில் செய்துவரும் ஏழைத் தம்பதியை ஏமாற்றி அவர்களுக்கான நிதியை ஏப்பம் விட்டிருக்கும் அரசு அலுவலர்களின் இந்த செயல் ரணம் என்றே கூறலாம்.
தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்தச் சம்பவத்தில் காணாமல் போன கான்கிரீட் வீடு கண்டுபிடிக்கப்படுமா என்பதற்கு காலமும், மாவட்ட ஆட்சியரும்தான் பதில் சொல்ல வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details