மும்பையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் வரை செல்லும் விரைவு ரயில்களை ஈரோடு வழியாக இயக்காமல், நாமக்கல் வழியே இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரு ரயில்களையும் நாமக்கல் வழியாக டிசம்பர் ஒன்று முதல் இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதில், மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் (எண் - 16339) ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சேலத்திற்கு பிற்பகல் 3.25 மணியளவிலும், நாமக்கல்லுக்கு பிற்பகல் 4.28 மணியளவிலும் வந்து சேரும். அதேபோல், நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் (எண் - 16340) திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் கரூருக்கு நண்பகல் 1.37 மணியளவிலும் , நாமக்கல்லுக்கு நண்பகல் 2.13 மணியளவிலும் வந்து சேரும்.
அதன்படி, மதியம் 2.30 மணியளவில், நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி நாமக்கல் வழியாக முதன்முறையாக வந்த விரைவு ரயிலை நாமக்கல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர். மேலும், என்ஜின் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.