நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (52). எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த இவர், அரசு மருத்துவர் செல்வம் என்பவர் பெயரில் அப்பகுதியில் கிளினிக் நடத்தி, அவரது லெட்டர் பேட் ஆகிவற்றைப் பல ஆண்டுகளாக உபயோகித்து வந்துள்ளார்.
இவர் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களுக்கு, மாத்திரை கொடுத்தல், ஊசி போடுதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத்தை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சின்னராஜ், மூன்று பேரை தங்கராஜின் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளார்.
அங்கு தங்கராஜ் மேற்கொண்ட சிகிச்சையின் அடிப்படையில், அவர் போலி மருத்துவர் என உறுதிப்படுத்தியுடன், இரவு பள்ளிபாளையம் காவல் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுடன் நாமக்கல் எம்.பி. சின்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தங்கராஜிடம், அவர் மருத்துவர் என்பதற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளார்.