நாமக்கல்:கிரைம் போலீஸ் என மிரட்டி டீக்கடை உரிமையாளரிடம் 3 லட்சத்து 44ஆயிரம் ரூபாய் பறித்த சம்பவம் நாமக்கல்லில் அரங்கேறியுள்ளது. டீக்கடை உரிமையாளரின் பயந்த சுபாவத்தைப் பயன்படுத்தி நூதன முறையில், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட போலி போலீஸை சுற்றி வளைத்து, நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் அடுத்த பொய்யேரிக் கரை பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர், செல்லதுரை(52). கடந்த மாதம் 26ஆம் தேதியன்று இவரது டீக்கடைக்கு வந்த மூன்று பேர், அவர்கள் சென்னை Special Crime Branch-ஐ சேர்ந்த காவல் துறையினர் என்றும், டீக்கடைக்காரர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், அவரை சென்னைக்கு அழைத்துச்சென்று விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று டீக்கடை உரிமையாளரான செல்லதுரையிடம் கூறிய அந்த மூன்று பேர், அவர் வீட்டு பீரோவில் இருந்த 34 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை எடுத்துள்ளனர். தொடர்ந்து செல்லதுரையின் கைபேசியை வாங்கி, அவரது வங்கிக் கணக்கை பார்த்தபோது, 3 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்ததைக் கண்டுள்ளனர். இதையடுத்து செல்லதுரைக்கு வங்கி கணக்குள்ள தனியார் வங்கிக்கு, அவரை அழைத்துச் சென்ற அந்த 3 பேர் 1 லட்சம் ரூபாய், 2 லட்சம் ரூபாய் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் என மூன்று காசோலைகளை பெற்றுக் கொண்டு, 3 லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக எடுத்துள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால், உன்னை கைது செய்வதோடு சிறைக்கு அனுப்பி விடுவோம் எனக் கூறி செல்லதுரையை மிரட்டி விட்டு, பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். பணத்தைப் பறி கொடுத்த செல்லதுரையும் பயந்து போய் அவரது மனைவி, மகள், மகன் என யாரிடமும் இது குறித்து கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் செல்லதுரையின் மகள் நேற்று சென்னையில் இருந்து வந்திருந்த போது, 10 ஆயிரம் ரூபாய், அவரது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்ததற்கான குறுஞ்செய்தியைக் கண்டு செல்லதுரையிடம் கேட்டுள்ளார்.