நாமக்கல் வண்டிக்கார தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (43), டாஸ்மாக் பார் நடத்திவருகிறார். அவரது பாருக்கு, மது குடிக்க வந்த பாஸ்கரன்(26), மணிமாறன்(45) ஆகியோர் தங்களுக்கு தெரிந்த நபர்கள், கணக்கில் வராத கருப்பு பணம் நிறைய வைத்திருப்பதாகவும், அதை வெள்ளை பணமாக மாற்ற இருடிப்பு பணம் தருவதாகவும் கூறி உள்ளனர்.
அதை நம்பி வெங்கடேஷ் தன்னிடம் இருந்த 5,000 ரூபாயை கடந்த ஜனவரி 6ஆம் தேதி விக்ரம் என்பவரிடம் கொடுத்துள்ளார். பதிலுக்கு அவர், 100 ரூபாய் கட்டு கொடுத்துவிட்டு, காவல்துறையினர் வருவதாக கூறி, அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதற்கிடையில் வெங்கடேஷ் தன்னிடம் கொடுக்கப்பட்ட 100 ரூபாய் கட்டை பிரித்து பார்த்துபோது, அதில் மேல் பகுதியில் மூன்று 100 ரூபாய் நோட்டுகளும், அடிப்பகுதியில் இரண்டு 100 ரூபாய் நோட்டுகளும் மட்டுமே இருந்தன. மீதம் உள்ள அனைத்தும் வெள்ளை தாள்களாக இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட, பாஸ்கரன், மணிமாறன் ஆகிய இருவரையும் நாமக்கல் காவல்துறையினர் ஜன. 6ஆம் தேதி கைது செய்தனர்.
பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மேலும் இவ்வழக்கில் சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரத்தை சேர்ந்த, முருகன் (56), அவரது மனைவி கண்ணகி(44) ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், நாமக்கல் பொன்விழா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு, முருகன், கண்ணகி இருவரும் வந்துள்ளதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.