நாமக்கல்: குமாரபாளையம் அருகேவுள்ள வேமன் காட்டு வலசு பகுதியில் ஜவுளி உற்பத்தித் தொழில் செய்துவருபவர் விமல். இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று (பிப்ரவரி 24) உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டில் பணம் எடுப்பதற்காக விமல் வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32 லட்சம் ரூபாய் ரொக்கம், 60 பவுன் தங்க நகைகள் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக குமாரபாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை வல்லுநர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
ஜவுளி உற்பத்தியாளர் வீட்டில் திருட்டு இதில் துப்பு எதுவும் கிடைக்காததால் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:11 மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு